Tamilசெய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் தீ – அதிஷ்ட்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

மத்திய பிரதேசத்திற்கும் புதுடெல்லிக்கும் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று காலை தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கோ உடைமைகளுக்கோ எந்த சேதமும் இல்லை. அந்த பெட்டியிலிருந்த சுமார் 22 பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வந்தே பாரத் ரெயில் வழக்கமாக ம.பி.யின் தலைநகர் போபாலிலிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு புதுடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை மதியம் 1.10 மணியளவில் சென்றடையும். இன்று காலை அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் ஒரு ரெயில் சக்கரத்தின் அருகிலிருந்து புகை வெளிவருவது கண்டதும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஒரு ரெயில் பெட்டியின் பேட்டரி பாக்ஸ் அருகே உருவான தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

“ராணி கமலாபதி ரெயில் நிலையத்தை விட்டு புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் C-14 கோச்சில் தீ பிடித்தது தெரிய வந்தவுடன், குர்வாய்-கைதோராவிற்கும் இடையே நிறுத்தப்பட்டு காலை 7.58 மணியளவில் தீ அணைக்கப்பட்டு ரெயில் 10.05 மணியளவில் டெல்லி நோக்கி புறப்பட்டது” என மேற்கு மத்திய ரெயில்வேயின் அதிகாரி ராஹுல் சிரிவாஸ்தவா தெரிவித்தார்.