சென்னையை அடுத்த வண்டலூர் வனஉயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் கடந்த 2010-ம் ஆண்டு பொதுமக்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பூங்காவில் பல்வேறு விலங்குகளை தத்தெடுத்து அதற்கு உண்டான செலவின தொகையை வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு நேரில் வந்தார். பின்னர் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.
இதனையடுத்து பூங்காவில் உள்ள ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார். தத்து எடுக்கப்பட்ட இந்த 2 வங்கப்புலிகளுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.
இதனையடுத்து விஜய் சேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது வண்டலூர் பூங்காவுக்கு வந்து விலங்குகளை பார்த்தேன்.
அப்போது பூங்காவில் விலங்குகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் இப்போது 2 ஆயிரத்து 500 விலங்குகள் இருப்பதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். பூங்காவில் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி வாகனங்கள், பேட்டரி சைக்கிள்கள் போன்றவை இங்கு உள்ளது. ஒரு காட்டுக்குள் வந்து சென்ற அனுபவம் இந்த பூங்காவுக்கு வந்தால் கிடைக்கிறது.
இந்த பூங்காவில் விலங்குகளை பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்து இங்கு உள்ள விலங்குகளை பார்த்தால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை நேரடியாக இணையதளம் மூலம் அனைவரும் காண முடியும், பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறு தொகையை கொடுத்து விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.