X

வட சென்னை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்

நாடு முழுவதும் 18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

இந்நிலையில் வடசென்னை தொகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கொளத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை ஜி.கே.எம். காலனியில் வீதிவீதியாக நடந்து சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். ஜம்பு லிங்கம் மெயின் ரோட்டுக்குட்பட்ட 32 தெருக்களில், திறந்த வாகனத்தில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று மாலை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். கடந்த மார்ச் 22-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர், இதுவரை 36 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.