அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-
பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென் இந்தியாவில் தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏனென்றால் வடஇந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் இடங்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்விகளை சரிகட்ட, அவர்கள் தென்இந்தியாவில் பிரசாரம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.
நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. பா.ஜனதா 200 இடங்ளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பா.ஜனதா சொல்கிறது. சமீபத்தில் இரட்டை என்ஜின் அரசான பா.ஜனதாவை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்த்தியது. தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதாவின் கனவை தகர்த்தது.
பிரதமர் மோடி 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.