X

வடிவேலு நடிக்க தடை விதிக்கும் தயாரிப்பாளர் சங்கம்!

வருடத்துக்கு 8, 10 படங்களில் ஓய்வில்லாமல் நடித்த வடிவேலு 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த படம் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவானது.

சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். வடிவேலு சில நாட்கள் நடித்தார். அதன்பிறகு இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு நடிக்க மறுத்துவிட்டார். இதனால் ஷங்கர் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.

இதுகுறித்து வடிவேலு கூறும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் எனது தரப்பு நியாயத்தை சொன்ன பிறகும் யாரோ தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள். நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளதாகவும் படம் பற்றிய அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவாவிடம் கேட்டபோது “இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு கொடுப்பது வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்” என்றார். இதன் மூலம் அவருக்கு எதிரான தடை நீடிப்பது உறுதியாகி உள்ளது.