சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருக பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சணை வைபவம் நடந்து வருகிறது.
கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வையொட்டி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உச்சி காலத்தில் லட்சார்ச்சணை பூர்த்தியடையும் நிலையில், தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகம் நடைபெற உள்ளன.
அதையடுத்து இரவு 7 மணிக்கு, சூரபத்மனை முருகபெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு தொடங்குகிறது. கோவிலுக்கு வெளியே சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, தெய்வானை சமேத சண்முகப் பெருமானின் புறப்பாடு மயில்வாகனத்தில் நிகழ உள்ளது. 4, 5, 6 மற்றும் 7-ந்தேதியில் இரவு 7 மணிக்கு முருகப்பெருமானின் மங்களகிரி விமான புறப்பாடு, சொக்கநாதர், மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்தி புறப்பாடு, அருணகிரிநாதர் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.