வடகிழக்கு பருவமழை 8 ஆம் தேதி வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட கூடுதலாக 2 சென்டி மீட்டர் பெய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்து வந்த நிலையில் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது.
குடிநீருக்கு மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்துள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதம் பருவமழை காலத்தில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவு இருந்தது.
இதனால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. குறிப்பாக இந்த வருடம் வடதமிழகத்தை விட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஊட்டி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு புயல் பாதிப்பு இல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சியின் மூலம் மழை கிடைத்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பாத நிலையில் பருவமழை காலம் முடிந்தது. நீர்மட்டம் பாதி நிறைந்த நிலையில் மழையும் படிப்படியாக குறைந்துவிட்டது.
பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடையும் என்று எதிர் பார்த்த நிலையில் புத்தாண்டு மற்றும் அதனையடுத்த நாட்களிலும் லேசான மழை பெய்தது. தற்போது மழை முடிந்து பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்றும், இன்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது.
பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பருவமழை காலமும் வருகிற 8-ந் தேதியுடன் நிறைவடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
‘வடகிழக்கு பருவமழை வருகிற 8-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி பனி பெய்ய தொடங்கி உள்ளது.
நேற்று தொடங்கிய பனிப்பொழிவு படிப்படியாக அதிகரித்து வரும் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். சூரியன் வெளிவருதற்கு தாமதம் ஆகும்.
காலை 9 மணி வரை கூட பனிப்பொழிவு ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் பனி அதிகமாக இருக்கும்’ என்றனர்.