X

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து துறை ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். அந்தந்த துறைகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி விதம் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மண்டல அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவர். பக்கிங்காம் கால்வாயில் இருந்து முட்டுக்காடு வரை தூர்வாரி பராமரிக்கவும், அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரியில் உள்ள கல்வாய், மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் முகப்புகளில் படிந்துள்ள மணலை தூர்வாரி, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் கி.மீ. மழைநீர் வடிகால்வாயை தூர்வாரும் பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

புதிதாக மழைநீர் வடிகால் மற்றும் இணைப்பு கால்வாய் ரூ.2 ஆயிரத்து 500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 150-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்குகிறது. அந்த இடங்களும் கண்காணிப்பட்டு தேங்கும் நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படுவதால் தற்போது சென்னையில் நான்கு அடிக்கு மேல் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்.கண்ணன், வணிக வரித்துறை இணை கமிஷனர் இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் வி.விஷ்ணு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் எம்.கோவிந்த ராவ், பி.குமாரவேல் பாண்டியன், பி.மதுசுதன் ரெட்டி, பி.என்.ஸ்ரீதர், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: south news