Tamilசெய்திகள்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்கு பருவமழை காலம் விலகுவதற்கான சூழல் தற்போது நிலவி வருவதாக கூறப்படுகிறது. தென் மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்ற பிறகு, அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த பருவமழை காலத்தில்தான் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் சில இடங்களுக்கு அதிகளவு மழை கிடைக்கும்.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்த ஆண்டு எந்த அளவு மழை இருக்கும்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் நேற்று தகவலாக தெரிவித்துள்ளது. அதன்படி, ”இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.