டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்களின்போது கடைகள், வாகனங்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், இன்று உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டடதையடுத்து, தற்போது அங்கு கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆங்காங்கே சிறுசிறு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
பதற்றம் நீடிப்பதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் குறைந்த அளவிலான வாகனங்களே செல்கின்றன. வன்முறை நடந்த பகுதிகளில் சாலைகளை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
வன்முறை நடந்த பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு படைகள் உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் மக்களிடம் அவர் உறுதி அளித்தார்.
போலீசார் கொடி அணிவகுப்புகளை நடத்திவருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறை மற்றும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் வடகிழக்கு பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ வைப்பு சம்பவம் தொடர்பாக நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 8 மணி வரை 19 அழைப்புகள் வந்ததாக தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்தார். 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டதாகவும், 4 தீயணைப்பு நிலையங்களிலும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் முகாமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.