’வஞ்சகர் உலகம்’ திரைப்பட விமர்சனம்
‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம் நடிப்பில், மனோஜ் பீதா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘வஞ்சகர் உலகம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
ஒரு பெண் கொலை செய்யப்பட, அந்த கொலை சம்பவ விசாரணையோடு தொடங்கும் படம், போதை மருந்து கடத்தல் தாதா-வின் வாழ்க்கையோடு பயணித்து, கள்ளக்காதலோடு கலந்து, இறுதியில் லெஸ்பியனோடு முடிவடைவது தான் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை.
ஒரு பெண் கொலை செய்யப்பட, அந்த கொலையை யார் செய்தது? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கும் இயக்குநர், இடையில் போதை மருந்து கடத்தல் தாதாவாக குரு சோமசுந்தரத்தை சித்தரித்ததோடு, அவரை ஹீரோவாக காட்டுவதற்காக திரைக்கதையில் இணைத்திருக்கும் கிளை கதையால் ஒட்டு மொத்த படமே கந்தல் கந்தலாக கிழிந்துவிடுகிறது.
கேங்ஸ்டர் வேடத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். போதை மருந்துக்கு அடிமையான, ஒருவித மனநல பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
சிபுபுவனசந்திரன், விசாகன், அனீஷா அம்ப்ரோஸ், அழகம்பெருமாள், ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ் என அனைவரும் தங்களது வேடத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருந்தாலும், படத்தின் முக்கியமான கதாபாத்திரமான சாந்தினிக்கு தான் நடிக்க வாய்ப்பே இல்லை. அவரது கதாபாத்திரத்தின் மூலம் படம் தொடங்கினாலும், அவருக்கான ஸ்கோப் படத்தில் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறது.
சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும், ரோட்ரிகோடெல்ரியோஹெரெரா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாந்தினியை கொலை செய்தது யாராக இருக்கும், என்ற கோணத்தில் படம் நகரும் போது, அந்த இடைவேளை காட்சி படத்தின் மீது சற்று ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தினாலும், அதன் பிறகு வரும் குரு சோமசுந்தரத்தின் காட்சிகளால் படத்தின் மிகப்பெரிய தொய்வு ஏற்படும் வகையில், மனோஜ் பீதா மற்றும் விநாயக்.வி ஆகியோர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்கும் குரு சோமசுந்தரம், போலீஸ் ஸ்டேனுஷுக்கு வந்து தனது நண்பரை மீட்பதோடு, போலீஸையும் எச்சரித்துவிட்டு செல்கிறார். அதை பார்த்துக்கொண்டு போலீஸ் சும்மா இருக்கிறது. இப்படி படத்தில் பல லாஜிக் மீரல் காட்சிகள் இருக்கிறது.
ஒன்றரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய ஒரு படத்தை 2.40 நிமிட ஜவ்வாக இழுத்து, படம் பார்ப்பவர்களை வதம் செய்யும் விதத்தில், பல பிளாஷ்பேக்குகளுடன் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் மனோஜ் பீதா, தேவையில்லாத காட்சிகள் பலவற்றை படத்தில் திணித்து, படம் பார்ப்பவர்களுக்கு மூச்சு திணறலே ஏற்பட வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், ரசிகர்களை வறுத்தெடுக்கும் இந்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் வஞ்சத்தில் வீழாமல் தப்பிப்பிப்பது நல்லது.
-ஜெ.சுகுமார்