வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – கனமழை பெய்ய வாய்ப்பு
தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை கொட்டியது. இதே போல் காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
6-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது.c
இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 6-ந்தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேலும் தீவிரம் அடையும் என்றும் அதற்கு அடுத்த 4 நாட்களில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.