வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சி இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ்மோடி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வெளிநாடு தப்பிச்சென்ற அவர்கள் இருவரையும் இந்தியா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.
ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர தூதரகம் வழியாகவும், சட்டரீதியாகவும் இந்தியா முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்சி கடந்த ஆண்டு ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றார். இந்திய குடிமக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அதன்படி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.