வங்கி மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 2018-19-ம் நிதியாண்டில் வங்கி மோசடி எண்ணிக்கை 15 சதவீதமும், மோசடி செய்யப்பட்ட தொகையின் எண்ணிக்கை 73.8 சதவீதமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வங்கிகள் 4½ ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்டுள்ளன.

2018-19-ம் ஆண்டு வரையிலான 55 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.52,200 கோடி ஆகும். ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.1 சதவீதமாகும்.

ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணங்கள் மூலமே அதிகப்படியான வங்கி மோசடிகள் நடந்துள்ளன. பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து வங்கி மோசடிகளை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

அதே நேரம் 2018-19-ம் நிதியாண்டில் இண்டர்நெட், கார்டுகள் மற்றும் டெபாசிட் தொடர்பாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.3 சதவீதம் மட்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி மோசடிகள் அதிகம் நடைபெறுவதில் தனியார் வங்கிகள் முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டு வங்கிகள் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளும் உள்ளன.

கள்ள நோட்டு கண்டெடுப்பு கடந்த நிதியாண்டில் மிகவும் குறைந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் 5,22,783 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் 2018-19-ம் நிதியாண்டில் 3,17384 நோட்டுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதில் 717 நோட்டுகள் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

இந்தியாவில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அன்றே திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரூ.2000 கள்ள நோட்டுகளும் அதிக அளவில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டில் 17,929 நோட்டுகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் 2018- 19-ம் நிதியாண்டில் 21,847 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools