வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளை நிதி அடிப்படையில் வலுப்படுத்தும் நோக்கில் 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதைப்போல வங்கி இணைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வங்கி ஊழியர்களும் ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக மேற்படி நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்ய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27-ந்தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் (சண்டிகர்) தீபல் குமார் சர்மா தெரிவித்தார். மேலும் இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், சம்பளம் திருத்தியமைப்பை வேகப்படுத்துவது, வாரத்தில் 5 நாள் வேலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

இந்த போராட்டத்தை தொடர்ந்து நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news