தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நக்மா. 48 வயதான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த ‘லிங்’கை நடிகை நக்மா ‘கிளிக்’ செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரின் விவரம்) புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 998 அபேஸ் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதுபற்றி நடிகை நக்மா கூறுகையில், “லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருப்பினும் எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சி.யை புதுப்பித்து தருவதாக கூறி, எனது இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். நல்ல வேளையாக நான் பெரும் தொகையை இழக்கவில்லை” என்றார்.
மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை நக்மாவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.