Tamilசெய்திகள்

வங்கிகளில் கேப்பாரற்று கிடக்கும் ரூ.78,213 கோடி

கடந்த நிதி ஆண்டின் முடிவில் கணக்குதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (டி.ஈ.ஏ.) ரூ.62.225 கோடி இருந்த நிலையில் தற்போது 26 சதவீதம் உயர்ந்து ரூ.78,213 கோடியாக அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக யாராலும் உரிமை கோரப்படாத பணத்தை கூட்டுறவு வங்கிகள் உள்பட நாட்டிலுள்ள பிற வங்கிகள் ரிசர்வ் வங்கியின் டி.ஈ.ஏ. கணக்குக்கு மாற்றி வருகின்றன. வங்கிகளில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை உரிமை கோரப்படாத பணமுடைய கணக்குகள் என வகைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி நிகழாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது.

இதுபோன்ற கணக்குகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் மறுஆய்வு செய்யுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. மேலும், ‘உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளரை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் அவரின் வாரிசுகள், அவரால் முன்மொழியப்பட்ட பிற உறவினர்கள் யாரேனும் இருப்பின் அவர்களிடம் பணத்தை வழங்கவும் அல்லது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த முன் எடுப்பின் மூலம் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தின் அளவு குறைந்து சரியான பயனாளிகளிடம் பணம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (ஆர்.ஆர்.பி.), கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வணிக வங்கிகளிலும் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.