வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. வங்காளதேச கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மோர்தசாவுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து மோர்தசா டாக்காவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மோர்தசாவின் மாமியார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வழிநடத்திய 36 வயதான மோர்தசா 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். அத்துடன் அந்த நாட்டின் எம்.பி.யாகவும் இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர் மோர்தசா ஆவார்.
‘‘நான் சீக்கிரம் குணமடைய வேண்டி ஒவ்வொருவரும் எனக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் மிகவும் கவனமுடன் இருங்கள். வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்’’ என்று மோர்தசா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பாலின் அண்ணனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி இருக்கிறது. அவர் சிட்டகாங்கில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 34 வயதான நபீஸ் இக்பால் வங்காளதேச அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக வங்காளதேச அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான நஸ்முல் இஸ்லாமும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் அண்ணனும், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளருமான சினேகாசிஷ் கங்குலியின் மனைவி, மாமனார், மாமியார் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சினேகாசிஷ் கங்குலியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை சினேகாசிஷ் மறுத்துள்ளார். தான் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும், தினசரி அலுவலக பணிகளை கவனித்து வருவதாகவும், தனது உடல்நிலை குறித்து வெளியான செய்திகள் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான 52 வயது சினேகாசிஷ் கங்குலி மொமின்புரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கங்குலி பெஹலாவில் உள்ள தனது மூதாதையருக்கு சொந்தமான பங்களாவில் குடியிருக்கிறார்.