Tamilவிளையாட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் (21.3 ஓவரில்) எடுத்து நல்ல தொடக்கம் கண்டு இருந்தது. அதன் பிறகு ஆப்கானிஸ்தான் பவுலர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. வங்காளதேச அணி 46.5 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 86 ரன்னும், ஷகிப் அல்-ஹசன் 30 ரன்னும், மக்முதுல்லா ஆட்டம் இழக்காமல் 29 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், முகமது நபி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதனை அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 40.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3-வது சதம் விளாசிய தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஜ் 106 ரன்களுடன் (110 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. முடிவில் வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. வங்காளதேச வீரர் லிட்டான் தாஸ் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது போட்டி மிர்புரில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.