வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்று முன் தினம் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதையடுத்து, 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி தொடக்கம் முதலே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிலைத்து நின்று ஆடவேண்டிய தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் மட்டும் சற்று நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.
ஆனால் அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வங்காளதேச அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்காளதேச அணி சார்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.