வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20 – பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் லாகூரில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு காரணத்திற்காக ஆட்டம் மதியம் 2.30 அளவில் தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிம் இக்பால் – முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 71 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது.
தமிம் இக்பால் 34 பந்தில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் லிட்டோன் தாஸ் 12 ரன்னிலும், முகமது நைம் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் மெஹ்முதுல்லா ஒரு பக்கம் நின்றாலும் மறுமுனை வீரர்கள் சொதப்ப வங்காளதேசம் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. மெஹ்முதுல்லா 14 பந்தில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பாபர் அசாம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். முகமது ஹபீஸ் 17 ரன்னில் வெளியேறினார். அஹ்சன் அலி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும் மறுமுனையில் அனுபவ வீரர் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்தில் 58 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.