வங்களாதேசத்துக்கு எதிரான 2வது டி20 – இந்தியா அபார வெற்றி
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முகமது நைம் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ஆடினர். இதனால் பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது.
லிட்டன் தாஸ் 29 ரன்னிலும், முகமது நைம் 36 ரன்னிலும் வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
சவுமியா சர்கார் 30 ரன்னும், மெஹ்முதுல்லா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்தது.
அதன்பின், 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
தொடக்கம் முதலே ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார், கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவருக்கு ஷிகர் தவான் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. தவான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
அவரை தொடர்ந்து ஷிரேயஸ் அய்யர் இறங்கினார். இருவரும் கடைசி வரை நின்று இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 1-1 சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நாக்பூரில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.