Tamilசெய்திகள்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.