வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டது

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னையிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

பகலில் வெளியில் சென்றவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நாளை மறுநாள் (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. மோக்கா என்ற அரபிமொழி வார்த்தையானது பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.

மோக்கா புயல் இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும். கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையை சேர்ந்தது. இந்த புயல் மத்திய வங்கக்கடல் அருகே நகர்ந்து மியான்மரை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (6-ந்தேதி) உருவாகிறது. இது வலுப்பெற்று 7-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7, 8-ந்தேதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 10-ந்தேதி 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த தேதிகளில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools