லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்க கூடாது – கவாஸ்கர் காட்டம்
பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இந்த டெஸ்டில் சொதப்பிய ராகுலை (2 ரன் மற்றும் 0) கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:
தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து நமது அணியில் வீரர்கள் தேர்வில் தொடர்ந்து மிகப்பெரிய தவறு நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு அணிக்கு தான். வீரர்கள் தேர்வு சரியாக இருந்திருந்தால் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைந்து, சரியான கலவையில் அணியை தேர்வு செய்தால் நிச்சயம் எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற முடியும். ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாமல் போனால், அதன் பிறகு இந்திய கேப்டன், பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்து தேர்வு குழு சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது. அவர் தாயகம் திரும்பி, கர்நாடக அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கருதுகிறேன். பெர்த் டெஸ்டின் முதலாவது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை நன்றாக சமாளித்து நிலைத்து நின்று ஆடியதே போட்டியில் திருப்பு முனையாகும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.