சந்திரயான்-3 திட்டம் ஒரு நிலவு புதிரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரை இறங்கியதும் அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவரின் 6 சக்கரங்களிலும் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.
நிலவின் தென்துருவத்தின் மேல்பரப்பில் ரோவர் ஆய்வுப்பணிக்காக சுற்றி வரும்போது, இந்த இரண்டு சின்னங்களும் நிலவின் மேல்பரப்பில் பதிக்கப்பட்டு வருவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏனோ இந்த இரண்டு சக்கரங்களும் நிலவின் மேல்பரப்பில் உள்ள மணல் பகுதியில் பதிக்கவும் இல்லை. நிலவின் மேற்பரப்பில் தெளிவான அடையாளங்களையும் விடவில்லை.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் தனித்தன்மையைப் பற்றிய புதிய நுண்ணறிவுகள் பெறப்பட்டு உள்ளது. இந்தப்பணி இன்றியமையாத பணியாகும். நிலவில் மண் தூசி நிறைந்ததாக இல்லாமல் கட்டியாக உள்ளது. இதற்கு காரணம் ஏதோ ஒரு பொருள் மண்ணை பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். காரணம் நிலவின் தென் துருவத்தில் எதிர்காலத்தில் மனிதர்களின் பயணங்களுக்கு ஒரு முக்கிய படிக்கல்லாக இவை அமையும். விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றில் இருந்து இதுவரை எந்த சிக்னல்களும் கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இருந்தாலும் நிலவு நாள் நம்பிக்கை அளிக்கிறது.
குறிப்பாக தொடர்ந்து 14 பூமி நாட்களுக்கு தொடர்ச்சியாக சூரிய ஒளி இந்த கருவிகள் மீது விழுவதால், அவை வெப்பமடைந்து விழித்தெழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நிலவின் வெவ்வேறு இடங்களில் சோதனைகளை மீண்டும் செய்யும் திறன் ஏற்படும். நிலவின் நிலப்பரப்பு மற்றும் அதன் மாறிவரும் பண்புகள் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதற்கு தரவு சேகரிப்பு மிக அவசியமாகிறது. பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் ஆய்வுக்கான அதிக வாய்ப்புகள் நிலவின் ரகசியங்களைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறுகின்றனர்.