லெபனானில் வங்கிகள் சூறையாடப்பட்டது – பணத்தை திரும்ப பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், இதனை எதிர்த்து பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல வங்கி கட்டிடங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். வங்கிகளுக்கு முன்பாக பெரிய டயர்களை கொளுத்தியும், வங்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள். தலைநகர் பெய்ரூட்டிற்கு வெளியே ஆடி வங்கி, பெய்ரூட் வங்கி, மற்றும் மவுண்ட் லெபனான் சின் எல்-ஃபில்.ல் உள்ள பிப்லோச் வங்கி ஆகியவற்றுக்கெதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கூறினர்.

போராட்டக்காரர்களில் ஒருவர், “நாங்கள் நீண்ட காலம் பொறுத்து விட்டோம். இனி அது முடியாது” என கூறினார். மற்றொரு போராட்டக்காரர், “வங்கிகளுக்கு நாங்கள் ஒரு செய்தியை இந்த போராட்டத்தின் வழியாக தெரிவிக்கிறோம். எங்கள் உரிமைகளை இன்றும் சரி, இன்னும் 100 ஆண்டுகளானாலும் சரி இழக்க மாட்டோம். இந்த செய்தியை வங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.

இந்த நெருக்கடி நிலை உருவாகக் காரணமான அதிகாரிகளில் அரசியல் தொடர்புடையவரான சலாமே குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மக்கள் பணத்தை கையாடல் செய்ததாக அவருக்கெதிரான விசாரணைக்காக பிரான்ஸ் நாடு ஒரு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கும் சூழ்நிலையில் இண்டர்போல் அமைப்பும் அவருக்கெதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், சலாமே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பல மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைகளை நீக்கி, ஒரு அதிபரை தேர்வு செய்ய லெபனான் நாடாளுமன்றத்தால் 12-வது முறையாக இயலாமலிருக்கும் சூழ்நிலையில் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

2019-ல் இருந்து லெபனானின் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. நவீன வரலாற்றில் இது மிகவும் மோசமானது என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. அமெரிக்க டாலருக்கு இணையாக லெபனானின் பணமதிப்பு மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news