X

லூதியானா நிதி நிறுவனத்தில் தங்கம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கில் சாலையில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்துகொண்டு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, சுமார் 30 கிலோ தங்கம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

அத்துடன், நிதி நிறுவனத்தில் உள்ள டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் தூக்கிச் சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும், ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

சிசிடிவி பதிவுகள் போலீஸ் கையில் சிக்காமல் இருப்பதற்காக, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால், நிதி நிறுவனத்தில் உள்ளவர்களின் துணையுடன் கொள்ளை நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன்மூலம் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.