Tamilவிளையாட்டு

லா லிகா கால்பந்து தொடர் – ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி

ஸ்பெயினில் நடந்து வரும் 20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், அலாவ்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (71 சதவீதம்) வைத்து இருந்த ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் பெர்லான்ட் மென்டியை, எதிரணி வீரர் ஜிமோ நவரோ ‘பவுல்’ செய்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை பயன்படுத்தி அந்த அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா அபாரமாக கோல் அடித்தார். இடைநீக்கம் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்ட கேப்டன் செர்ஜியோ ரமோஸ்க்கு பதிலாக கேப்டன் பொறுப்பை வகித்த கரிம் பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 18-வது கோல் இதுவாகும்.

51-வது நிமிடத்தில் பென்ஜிமா தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் மார்கோ அசென்சியோ கோலாக மாற்றினார். பதில் கோல் திருப்ப அலாவ்ஸ் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை வீழ்த்தியது. கொரோனா இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் தொடர்ச்சியாக சுவைத்த 8-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கி விட்டது. அந்த அணி 35 ஆட்டத்தில் ஆடி 24 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 80 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 36 ஆட்டத்தில் விளையாடி 79 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 14-ந்தேதி கிரானடா அணியை சந்திக்கிறது. பார்சிலோனாவுக்கு 2 ஆட்டங்கள் உள்ளன.

ரியல் மாட்ரிட் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிடும். ரியல் மாட்ரிட் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இரண்டில் டிரா செய்தால் 85 புள்ளிகளுடன் முதல் இடம் பிடிக்கும். பார்சிலோனா இரண்டிலும் வெற்றி பெற்றால் 85 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடிக்கும் விட்டுக்கொடுத்த கோல்கள், அடித்த கோல்கள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

ஒருவேளை பார்சிலோனா ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதேவேளையில் ரியல் மாட்ரிட் 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிராவது செய்ய வேண்டும்.

ரியல் மாட்ரிட் அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *