‘லால் சிங் சத்தா’ படத்திற்கு ஆதரவு கொடுங்கள் – நடிகர் நாக சைதன்யா வேண்டுகோள்
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் ‘லால் சிங் சத்தா’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் நாக சைதன்யா பேசியதாவது, ”நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய கலை உலக பயணத்தில் முக்கியமான திரைப்படம்.
ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தன் மற்றும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று வழங்குகிறோம். திரையரங்கத்திற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டுகிறேன்” என்று பேசினார்.