லாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்ய முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடிகள் கொண்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விலைக்கு விற்கப்படுகிறது.

குடிநீர் தேவைப்படுவோர் ஆன்லைனில் பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் தற்போது வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆன்லைனில் பதிவு செய்யும் போதே அதற்கான கட்டணத்தையும், முன் கூட்டியே செலுத்த வேண்டும். 6 ஆயிரம் லிட்டர், 9 ஆயிரம் லிட்டர், 12 ஆயிரம் லிட்டர் ஆகிய வகையாக லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

தண்ணீர் வேண்டி பதிவு செய்தவர்கள் அதனை தங்கள் வீடுகளில் உள்ள சம்புகளில் இருப்பு வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் லாரி தண்ணீருக்காக மக்கள் திண்டாடினார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத நிலையில் இருந்தது. ஒரு மாதம் வரை பதிவு செய்து காத்திருந்த நிலையும் காணப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. 5 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

6 ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.435-க்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் விலை ரூ.499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.700-ல் இருந்து ரூ.735 ஆகவும் உயர்ந்துள்ளது.

வணிக ரீதியாக வினியோகிக்கப்படும் லாரி குடிநீரின் விலையையும் வாரியம் உயர்த்தியுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் ரூ.500, 6 ஆயிரம் லிட்டர் ரூ.735, 9 ஆயிரம் லிட்டர் ரூ.1050, 12 ஆயிரம் லிட்டர் ரூ.1,400 என்ற வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news