லாட்டரி சீட்டில் ரூ.70 லட்சம் பரிசு வென்ற கேரள தொழிலாளி!

கேரள அரசு, பாக்கியஸ்ரீ உள்பட பல்வேறு லாட்டரிச் சீட்டுகளை நடத்தி வருகிறது. பண்டிகை காலங்களில் இந்த லாட்டரிச்சீட்டுகள் மூலம் பம்பர் பரிசு குலுக்கலும் நடத்தப்படுகிறது.

லாட்டரிச்சீட்டுகளை வாங்கும் பலரும் பரிசு பெற்று வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மனைவியின் விருப்பத்திற்காக வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்து அவரை அதிர்ஷ்டசாலியாக மாற்றி உள்ளது.

அவரது பெயர் சிவன். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு ஓமணா என்ற மனைவி உள்ளார். சமீபத்தில் சிவன் தனது மனைவியுடன் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்தபோது அந்த பகுதியில் ஒருவர் லாட்டரிச்சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அவர், தான் ஒரு இதய நோயாளி என்றும் அதற்காக ஆபரே‌ஷன் செய்து உள்ளதாகவும் தனக்கு உதவுவதற்காக லாட்டரிச்சீட்டை வாங்கும்படி உருக்கமாக அவர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் லாட்டரிச் சீட்டு வாங்க விருப்பமின்றி சிவன் அவரை கடந்து சென்றார். ஆனால் அவரது மனைவி ஓமணாவுக்கு லாட்டரி விற்பவர் மீது இரக்கம் ஏற்பட்டதால் கணவரிடம் லாட்டரிச்சீட்டு வாங்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதனால் மனைவியின் விருப்பத்திற்காக அவரிடம் இருந்து லாட்டரிச்சீட்டை சிவன் வாங்கினார்.

அந்த லாட்டரிச்சீட்டின் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சிவன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்திருந்தது. இதுபற்றி சிவன் கூறியதாவது:-

நான் ஏழை கட்டிட தொழிலாளி. இதனால் எனக்கு பணத்தை வீணாக செலவு செய்வதில் விருப்பம் கிடையாது. சமீபத்தில் மனைவி விரும்பியதால் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்து உள்ளது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தற்போது நாங்கள் சிறிய வீட்டில் குடியிருந்து வருகிறோம். லாட்டரி பரிசு பணம் மூலம் அந்த வீட்டை பெரிய வீடாக மாற்றுவேன். கடனையும் அடைத்துவிட்டு வாழ்க்கையை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news