’லத்தி’- விமர்சனம்
போலீஸ் கான்ஸ்டபிளான விஷாலுக்கும், ரவுடி ரமணாவுக்கும் இடையே பகை உண்டாகிறது. விஷாலை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரமணா, விஷாலையும் அவரது மகனையும் தனது அடியாட்களுடன் சுற்றி வளைக்கிறார். ரமணாவிடம் இருந்து தன்னையும், தனது பிள்ளையையும் காப்பாற்ற போராடும் விஷால், அதற்காக என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை.
ஆக்ஷன் ஹீரோக்கள் போலீஸாக நடித்தாலே பெரிய பதவியில் இருப்பது போல தான் கதாபாத்திரத்தை வடிவமைப்பார்கள். விஷால் கூட சில படங்களில் அப்படித்தான் மாஸ் காட்டியிருக்கிறார். ஆனால், இந்த படத்தில் வித்தியாசமாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் மிக இயல்பாக விஷால் நடித்திருக்கிறார். தனது மகன் ஆசைக்காக எப்படியாவது போலீஸ் சீருடையில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் விஷால், தனது பறிதவிப்பை நடிப்பில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுவது விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்றாலும், சண்டைக்காட்சி நடுவே தனது மகனுக்காக கதறி கண்ணீர் விடும் இடத்தில் நடிப்பில் அமர்க்களப்படுத்துகிறார். “என் ராசய்யா எங்கே…” என்று அவர் கதறும் போது படம் பார்ப்பவர்களின் கண்களும் கலங்குகிறது.
விஷாலுக்கு மனைவியாக நடித்திருக்கும் சுனைனாவுக்கு டூயட் பாடல், காதல் காட்சிகள் இல்லை என்றாலும், கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளில் ரசிகர்களை கிரங்கடிக்க செய்வதோடு, தனது குறைவான பணியை நிறைவாகவும் செய்திருக்கிறார்.
வெள்ளை என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமணா, அதிகம் பேசாமல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹீரோவுக்கு நிகரான ஒரு வில்லன் வேடம், அதில் பாராட்டும் வகையில் நடித்திருப்பதோடு, தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லன்கள் இல்லாத குறையை தீர்த்து வைக்கும் விதத்தில் ரமணா நடித்திருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரபு, தலைவாசல் விஜய், விஷாலின் மகனாக நடித்திருக்கும் லிரிஷ் ராகவ், ரமணாவின் அப்பாவாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சன்னி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டல். கட்டுமான பணி நடக்கும் இடத்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சியை பல கோணங்களில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை இரண்டாம் பாதி முழுவதும் இடம்பெறும் சண்டைக்காட்சியை சலிப்படையாமல் பார்க்க உதவுகிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இயக்குநருக்கு நிகராக பணியாற்றியிருக்கிறார். சண்டைக்காட்சி என்பது ஒரு படத்தின் பகுதியாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த படத்தின் இரண்டாம் பாதியே சண்டைக்காட்சியை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால், அதை வெறும் சண்டைக்காட்சியாக மட்டும் இன்றி அதில் பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியாகவும் வடிவமைத்து பீட்டர் ஹெய்ன் அசத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என்.பி, இந்த கதையை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் தொகுத்திருக்கிறார். இப்படி ஒரு கதையை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்வது மிகப்பெரிய சவலாக இருந்திருக்கும். ஆனால், அந்த சவாலை மிக சாமர்த்தியமாக ஸ்ரீகாந்த் என்.பி செய்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.வினோத் குமார், ஒரு சாதாரண காவலர்களின் வாழ்க்கையை கமர்ஷியல் ஆக்ஷன் ஜானர் படமாக கொடுத்திருக்கிறார்.
விஷால் போன்ற ஆக்ஷன் ஹீரோவை மிக இயல்பாக நடிக்க வைத்ததோடு, அதே ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையே செண்டிமெண்டை வெளிப்படுத்தும் விதமாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்தும் இருக்கிறார்.
முதல் பாதியை குடும்ப செண்டிமெண்டோடு நகர்த்தினாலும், அவ்வபோது விஷாலின் அதிரடியை இயல்பாக காட்டி ரசிக்க வைக்கும் இயக்குநர் வினோத் குமார், இரண்டாம் பாதியை மிகப்பெரிய ஆக்ஷன் காட்சியோடு நகர்த்தி நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறார்.
விஷாலை வில்லன்கள் துரத்தும் போது அவர் மட்டிக்கொள்ள கூடாது, என்று நினைக்கும் வகையில் நம்மையும் கதையோடு பயணிக்க வைக்கும் இயக்குநர், கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தில் விஷாலும், அவரது மகனும் சிக்கிக்கொள்ளும் போது, அடுத்தது என்ன நடக்கும்?, விஷாலால் தப்பிக்க முடியுமா? என்ற கேள்விகளை நம் மனதில் எழுப்பி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
எளிமையான கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் வினோத் குமார், ஆக்ஷன் படத்தை புதிய வடிவத்தில் கொடுத்திருப்பது பாராட்டும்படி இருந்தாலும், சில நேரங்களில் ஆக்ஷன் காட்சிகளும், நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் விஷால் மோதுவதும் லாஜிக் மீறலாக இருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த ஆக்ஷன் பட ரசிகர்களுக்கான விருந்தாக இருப்பதோடு, வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கிறது.