X

லண்டன் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

லண்டனில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு மர்ம பார்சல்கள் வந்தன. இதில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பார்சலை ஒரு அதிகாரி பிரித்தபோது அது திடீரென தீப்பிடித்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அதேசமயம் லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பார்சல்கள் பிரிக்கப்படவில்லை. அதிலும், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த பார்சல்களை அனுப்பி மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பார்சல்களில் அயர்லாந்து நாட்டின் தபால் முத்திரை இருந்தது. எனவே, இதுபற்றி அயர்லாந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. லண்டன் பெருநகர போலீசாருடன் அயர்லாந்து போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேசமயம், லண்டன் நகர மக்கள், பயணம் செய்யும்போது விழிப்புடன் இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகப்படும்படியான பார்சல்கள் கிடந்தால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.