இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பான புகார் ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக நாங்கள் லண்டனில் உள்ள ஓட்டலில் சமீபத்தில் தங்கியிருந்தோம். அப்போது மர்ம நபர் ஒருவர் எனது அறைக்குள் நுழைந்து, நான் வைத்திருந்த பேக், பணம், கார்டு, நகை மற்றும் வாட்ச்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார்.
ஓட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இது போன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ள ஓட்டலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளித்திருப்பது வியப்பளிக்கிறது. விரைவில் விசாரணை நடத்தி திருட்டு போன எனது பொருட்களை மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அறிந்த ஓட்டல் நிர்வாகம், ‘இந்த தகவல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த நாள் மற்றும் விவரங்களை இ-மெயில் மூலம் அனுப்புங்கள்.நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று கூறியுள்ளது.
24 வயதான தானியா பாட்டியாவுக்கு இங்கிலாந்து பயணத்தின் போது ஒரு நாள் தொடரில் களம் காண வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.