இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியான. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், லண்டனின் மேற்கு கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிரவ் மோடி சொகுசாக வாழ்ந்து வருவதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 3 படுக்கையறை கொண்ட வீட்டில் நிரவ் மோடி தங்கியிருப்பதாகவும், அங்கிருந்து புதிதாக வைர விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதுதவிர நிரவ் மோடியிடம் செய்தியாளர்கள் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கிஹிம் கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த நிரவ் மோடியின் பங்களாவை அதிகாரிகள் வெடிவைத்து தகர்த்து தரைமட்டம் ஆக்கிய மறுநாள் இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.