லண்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவையை இந்திய அரசு இன்று முதல் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு புதியவகை கொரோனா பரவியுள்ளதா? என பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருடன் பயணித்த எஞ்சிய பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என பரிசோதனை செய்யப்பட உள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்
என தெரிவித்துள்ளார்.