லகிம்பூர் வன்முறை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த 10-ந் தேதி பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லகிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையில் லகிம்பூர் வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.