ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பிடித்திருந்தார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நான்கு பந்து வீச்சாளர்களுடன்தான் விளையாடுவோம் என்றார்.
இதனால் ரகானே, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா ஆகிய மூன்று பேரில் இரண்டு பேருக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு உறுதியானது. ரகானே அல்லது விஹாரிக்குப் பதிலாக ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. துணைக் கேப்டனான ரகானேயின் இடத்தை அணி நிர்வாகம் உறுதிய செய்தது.
சுழற்பந்து வீச்சில் ஜடேஜா மட்டுமே இருந்ததால் அவருக்கு துணையாக தேவைப்பட்டால் பந்து வீச வைத்துக் கொள்ளலாம் என்று ரோகித் சர்மாவுக்குப் பதிலாக விஹாரியை எடுத்தனர். ரகானே மற்றும் விஹாரி ஆகியோர் ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சிறப்பான விளையாடினர்.
ரகானே முதல் இன்னிங்சில் அரைசதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்தார். விஹாரி 2-வது இன்னிங்சில 90 ரன்கள் சேர்த்தார். இதனால் நாளை ஜமைக்காவில் தொடங்கும் 2-வது டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில் ரோகித் சர்மா காத்திருக்க வேண்டும் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘தற்போது ரகானே சிறப்பாக விளையாடுகிறார். அதேபோல் விஹாரியும் நன்றாக விளையாடினார். இதனால் ரோகித் சர்மா காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்’’ என்றார்.