உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அபாரமாக விளையாடி வருகிறது. 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, நேற்று அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் முதலில் இறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை வெகுவாக உயர்த்தி வருகிறார். அதன்பின் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் போதுமான அளவிற்கு ஸ்கோரை உயர்த்துகின்றனர். இந்த பார்முலா இந்தியாவுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இந்தியாவின் அந்த அணுகுமுறையை கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ரியல் ஹீரோ என புகழராம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் “நாளைய (இன்று) ஹெட்லைனில் விராட் கோலிதான் இருப்பார். அதேபோல் ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சமியும் இடம் பிடிப்பார்கள். இந்திய அணியின் காலாசாரத்தை மாற்றிய ரோகித் சர்மாதான் உண்மையான ஹீரோ.
இன்றைய (நேற்று) போட்டியில் ரியல் ஹீரோ ரோகித் சர்மாதான் என நினைக்கிறேன். குரூப் ஸ்டேஜ் போட்டிகள் வேறு. நாக்அவுட் போட்டி என்பது வேறு. பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறையை இந்திய அணி வீரர்களுக்கு மிகவும் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்.” என்றார்.