Tamilவிளையாட்டு

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த விராட் கோலி

ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கினர்.

19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் அரை சதம் மற்றும் அதிக ரன்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றனர். இந்திய வீரர்களையடுத்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்து வீரர் கப்தில் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

டி20 போட்டியில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில், விராட் கோலி (32), ரோகித் சர்மா (31), பாபர் அசாம் (27) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா (3548) ரன்களுடன் முதல் இடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே கப்தில் (3497), விராட் கோலி (3462) ரன்கள் எடுத்துள்ளனர்.