‘ரைட்டர்’ படத்தை கைப்பற்றிய ஆஹா ஒடிடி நிறுவனம்
அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு இவர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் ‘ரைட்டர்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசிய இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ‘ஆஹா’ கைப்பற்றியுள்ளது. பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் நடத்தும் ‘ஆஹா’ ஓடிடி தளம் தமிழில் வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து ‘ரைட்டர்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.