ரேஷன் பொருட்கள் வாங்குவதில் மாற்றம்! – அடுத்த மாதம் முதல் வாரம் அமலுக்கு வருகிறது

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும். இதன்படி தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சத்து 3,379 குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் ஆதார், செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ரேசன் அட்டைதாரரும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பொருட்களை ‘ஸ்மார்ட்’ ரேசன் அட்டை மூலமாகவும், ஆதார் அடையாள அட்டை மூலமாகவும் அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மூலமாகவும் (ஓ.டி.பி. மூலம்) பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கேற்ப தற்போது ஆன்-லைன் வினியோகத்துக்காக பயன்படுத்தப்படும் விற்பனை உபகரணங்களில் சாப்ட்வேர் மாற்றம் செய்யப்படுகிறது.

இது நடைமுறைக்கு வரும் போது, ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப அருகில் உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்க முடியும். தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதி தற்போது தயாராகவே உள்ளது.

ஆனாலும் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தும் விதமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அத்தியாவசிய பொருட்களில் 5 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools