ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை!

தமிழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின்படி, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த பயோ மெட்ரிக் முறைப்படி, ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கைரேகை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ஒரு ரேஷன் கார்டை உறுப்பினர் அல்லாத எவரும் கொண்டு சென்று பொருட்களை வாங்க முடியாது.

அதே போன்று, முன்பு ஒரே நபர் பல ரேஷன் அட்டைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்குவார்கள். ஆனால், தற்போதைய பயோ மெட்ரிக் முறைப்படி தந்தைக்கும், மகனுக்கும் தனித்தனியாக ரேஷன் கார்டு வைத்து இருந்தால் அவர்கள் தனித் தனியாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

இந்த பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகை பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்து போகாமல் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது. சென்னை சேத்துப்பட்டு மங்களபுரத்தை சேர்ந்த ராஜகோபால்(வயது 76) என்ற முதியவரின் ஒற்றை பெயருடைய ரேஷன் கார்டில் பொருட்கள் வாங்குவதற்காக அவர் சேத்துப்பட்டு பள்ளி சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். காலையில் சென்ற போது பயோமெட்ரிக் எந்திரத்தில் ராஜகோபாலின் கைரேகை ஒத்து போகவில்லை. அதைத் தொடர்ந்து பிற்பகலிலும் முயற்சி செய்து இறுதியாக மாலை 4 மணியளவில் அவரது கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பயோ மெட்ரிக் முறையால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்து போகாத நபர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீடு எண்(ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓ.டி.பி. சரியாக சென்று சேரவில்லை என்றால், ரேஷன் கார்டுடன்(ஸ்மார்ட் கார்டு) இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், இணையதள வேகம் குறைவாக இருப்பதால், ‘சர்வரில்’ இருந்து தகவல்களை பெறுவதற்கு காலதாமதம் ஆகிறது என்றும். இதனால், சில நேரங்களில் ஒரு நபருக்கு 10 நிமிடங்களுக்கு மேலாக காலதாமதம் ஆகிறது என்றும், அதன் காரணமாக மொத்தமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே, சர்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools