ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது

தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 10-ந்தேதி தலைமை செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

அந்த டோக்கனில் எந்த தேதியில் வந்து ரே‌ஷன் கடை களில் ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் விநியோகிக்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் 500 ரூபாயாக 4 நோட்டுகள் வழங்கப்பட்டது.

அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரம் பணத்தை வழங்கினார்கள்.

கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு இருந்ததால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ரே‌ஷன் கடை முன்பு வட்டம் வரையப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு ரே‌ஷன் கடை முன்பும் போலீசார் இதை கண்காணித்து கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டனர்.

மொத்தம் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு ரே‌ஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் பணத்தை வாங்க முண்டியடிக்க தேவையில்லை. பொறுமையாக சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா சமயத்தில் முழு சம்பளம் கிடைப்பதால் அவர்கள் ரே‌ஷன் கடைகளில் தரும் ரூ.2 ஆயிரம் பணத்தை பெற்று முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்றும் சங்க தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த பணம் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools