’ரெயில் 18’ சோதனை ஓட்டம் வெற்றி – ஜனவரி மாதம் போக்குவரத்து தொடக்கம்

ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.

இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.

இந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools