தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பலவற்றிலும் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் பெட்டிகளில் திடீரென முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறுவதும், அப்போது பயணிகளுக்கு இடையே வாக்குவாதம், மோதல் ஏற்படும் காட்சிகள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் கழிவறை முன்பும் ஏராளமான பயணிகள் படுத்து தூங்குவது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. சச்சின் குப்தா என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறி இருப்பதையும், அவர்கள் கழிவறை முன்பு மட்டுமல்லாமல், நடைபாதையிலும் படுத்து தூங்கும் காட்சிகள் உள்ளன. இதனால் பயணிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், ரெயிலில் இருக்கை, தளம், கழிவறை என எங்கு இடம் கிடைத்தாலும் பயணிகள் அதை ஆக்கிரமித்து கொண்டதாகவும் சச்சின் குப்தா தனது பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அவரது இந்த பதிவு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.