Tamilசெய்திகள்

ரெயில் நிலையம் நடைமேடை டிக்கெட் விலை உயர்வுக்கு எதிர்ப்பு – திரும்ப பெற வலியுறுத்தல்

பாதுகாப்பு கருதியும், நீண்டதூர பயணங்களுக்கு ஏதுவாக இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே நாடுகின்றனர். அவ்வாறு ரெயிலில் ஏற ரெயில் நிலையம் வரும் பயணிகளை வழியனுப்ப அவர்களுடன் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டநெரிசலால் சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு. எனவே தேவையில்லாமல் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் நபர்களை கட்டுப்படுத்த ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ரெயில் நிலையங்களில் வீணாக சுற்றித்திரிவோர் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நடைமேடை டிக்கெட்டு இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.5 ஆக மட்டுமே இருந்தது. அதை வாங்கி பயணிகளுடன் வருபவர்களுக்கு ரெயில் நிலையத்தினுள் 2 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது ரெயில் நிலையங்களில் தினந்தோறும் ஏராளமாக நடைமேடை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்கின்றன. உதாரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் மட்டுமே தினசரி 700-ல் இருந்து 800 எண்ணிக்கையிலான நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே வாரியத்தின் அறிவிப்பின்படி, நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. பயணிகளும் அதை ஏற்றுக்கொண்டு வழக்கம்போல் பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடு விதிகளை நிர்ணயித்து அவற்றை செயல்முறைக்கும் கொண்டு வந்தது. அதன் ஒருபகுதியாக ரெயில் நிலையங்களில் தேவையற்ற நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.50 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் ரெயில் நிலையங்களுக்கு வழியனுப்ப செல்வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து நடைமேடை டிக்கெட்டு கட்டணம் பழைய நிலைக்கு வந்து தற்போது தொடர்ந்து ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, சென்னை கோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட 8 முக்கிய ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பண்டிகை காலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே தற்போது ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டு கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் குறிப்பிட்ட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு செல்வதற்கே மின்சார ரெயிலில் கட்டணம் ரூ.10 தான் என்ற நிலையில், ரூ.20 கொடுத்து ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் வாங்கி செல்ல வேண்டி உள்ளதே என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ரெயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தை கவனிக்குமா?