ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவது ரெயில்வேக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, பான் மற்றும் புகையிலை பொருட்களை மென்று துப்புபவர்களால் ஏற்படும் கறையை அகற்ற ஆண்டுக்கு ரூ.1,200 கோடியும், நிறைய தண்ணீரும் செலவாகிறது.
இதற்கு ஒரு தீர்வாக கையடக்க பை மற்றும் பெட்டியை ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே மண்டலங்களில் 42 ரெயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தம், ‘ஈசிஸ்பிட்’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு பை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. 3 வடிவங்களில் பை கிடைக்கும். ரெயில்வே வளாகத்தில் இருக்கும்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பையில் துப்பிக் கொள்ளலாம். இது மறுபயன்பாடு கொண்டது. 20 தடவை வரை துப்பலாம்.
அந்த பைக்குள் ஒரு தானிய விதை இருக்கும். பையை பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அது முளைத்து செடியாக வளரும். ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்க இந்த முறை உதவும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.