ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கடந்த வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், ரெயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றி ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதனால் மத்திய பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் வினோத் குமார் யாதவ் நேற்று உத்தரபிரதேச மாநிலம் பல்லியா நகரில் நிருபர்களிடம் பேசுகையில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். புதிய ஆண்டில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும், கூடுதலாக ரெயில்கள் இயக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.
